tamilnadu

img

சூரிய சக்தி மூலம் 7,500 மெகாவாட் வரை மின் உற்பத்தி உயரும்!

இந்த 2019-20 நிதியாண்டில், சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தியை 7,000 மெகாவாட் முதல் 7,500 மெகாவாட் வரை 15 சதவீதம் உற்பத்தியை உயர்த்தலாம் என கடந்த 12-15 மாதங்களில் நடைபெற்று வரும் சூரிய சக்தி மின் திட்டங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் மற்றும் திட்டப்பணிகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளின், சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களை நடத்துவதில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக மின் உற்பத்தி 6000 முதல் 6500 மெகா வாட் வரை இருந்தது என இக்ரா (ICRA) நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

நம் நாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்கள் சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களை நிறுவி நடத்துவதில் நல்ல வளர்ச்சி கண்டு வருகின்றன. மத்திய அரசும் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் சூரியசக்தி மின் உற்பத்தித் திறனை 1 லட்சம் மெகா வாட்டாக உயர்த்த திட்டமிட்டு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதை அடுத்து, கிரிசில் (CRISIL) தர நிர்ணய நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி நாட்டின் சூரியசக்தி மின் உற்பத்தி திறன் வரும் 2022-ஆம் ஆண்டில் 60,000 மெகா வாட்டாகவும், 2023-ஆம் ஆண்டில் 70,000 மெகா வாட்டாகவும் மட்டுமே உயரும் என்று தெரிகிறது.

இதுகுறித்து, ”கடந்த 2018ஆம் ஆண்டில் 11 கிகாவாட் சூரிய சக்தி உற்பத்திக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டில் 4.5 கிகாவாட் உற்பத்திக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டது. இதேபோல், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளிலும் உற்பத்தி திறன் அதிகரிக்க கூடிய வகையில் இருக்கும்” என்று இக்ரா நிறுவனத்தின் துணை தலைவர் கிரிஷ்குமார் கதம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சூரிய சக்தி மூலம் மின் உற்பத்திக்கு பல சலுகைகள் அளித்தாலும், சூரிய மின் தகடுகளை இறக்குமதி செய்வதற்கு உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பு வரி (Domestic Business Security Tax) விதித்துள்ளது. மேலும், இது தொடர்பான ஒப்பந்தங்கள் தெளிவற்ற நிலையில் உள்ளதால், சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி பின்னடைவை சந்திக்கிறது என்று கிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


;